அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை….

கொரோனா தாக்கம் இன்னும் முற்றாக முடிவடையாத போதும் சர்வதேச கிரிக்கெட் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. அங்கு இந்திய அணி வீரர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலிய தொடரில் 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.  போட்டிகளை  நேரில் பார்ப்பதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது. 

ஆஸ்திரேலியா தொடரில் ODI,T20, போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறாதது இந்திய அணிக்கு பலவீனமாகவே அமைந்தது.  தவான் – ரோகித் சர்மா இணை நீண்ட நாட்களாக இந்திய அணியின் ஓபனர்களாக உள்ளது. ரோகித் சர்மா இடம் பெறாததால்  தவானுடன் ஷுப்மன் கில் இணைந்தார். இந்த புதிய கூட்டணியை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எளிதாக முறியடித்துவிட்டனர். 

கே.எல்.ராகுலை இன்னும் எந்த இடத்தில் விளையாட வைப்பது என முடிவு செய்ய முடியாமல் இந்திய அணி தடுமாறி வருவதை இந்த தொடர் மீண்டு நினைவூட்டியுள்ளது. 

ஒவ்வொரு தொடரிலும் ராகுல் வெவ்வேறு இடத்தில்  இறங்கி விளையாடிவருவது  இந்திய அணிக்கு பலவீனத்தையே ஏற்படுத்தக் கூடும். அவருக்கு ஒரு நிரந்தரமான இடத்தை கோலி நிச்சயம் கண்டறிந்தே ஆகவேண்டும்.

முதல் இரண்டு ஒருநாள்  போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 370 க்கு ரன்னுக்குமேல் எடுத்தது. பும்ரா, சாமி என நட்சத்திர பந்துவீச்சாளர் இருந்தும் ஆஸ்திரேலியா அணியின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தொடரை இழப்பதற்கு பந்துவீச்சாளர்களே முக்கிகாரணம்.

3வது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என எண்ணிய  கோலி அணியில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்த மாற்றம் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.

மூன்றாவது போட்டியில் தமிழக வீரர் நடராஜனைப் பந்துவீச அனுமதித்தார் கோலி். முதல் இரண்டு போட்டிகளிலும் 100 ரன்களுக்கு மேல்தான் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் விழுந்தது. 3 வது போட்டியில் 25 ரன் இருக்கும் போதே  மரன்ஸ் லாபசுக்னேவின் விக்கெட்டை எடுத்து கேப்டன் கோலியிடம் பாராட்டையும், தமிழ்நாட்டிற்கு பெருமையையும் சேர்த்தார் நடராஜன். இந்த போட்டியில் 2 விக்கெட் எடுத்த நடராஜனுக்கு டி20 விளையாடுவதற்கான கதவும் திறந்தது.

ஐபிஎல் தொடரை முடித்தவுடனே ஆஸ்திரேலியா தொடரை எதிர் கொண்டதால் டி20 தொடரில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற முடிந்தது. ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் டி20 போட்டியில் பலம் வாய்ந்த அணியாக  இந்திய அணி உள்ளது.

டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடராஜன். டி20 தொடர் வென்றதற்குப்  பாண்டியா மற்றும் நடராஜன் பங்கு அளப்பரியது. 

4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில்,  பகல் இரவாக நடைபெற்ற  முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் தடுமாற்றத்துடன் விளையாடி 244 ரன் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 200  ரன்களுக்குள் சுருண்டது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலிய அணி தோல்வியை காணவில்லை. இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு  ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்தனர் இந்திய வீரர்கள்.

ப்ரித்வி ஷாவால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு ஓவர் கூட விளையாட முடியவில்லை. நல்ல ஓப்பனிங் அமையாதது இந்திய அணிக்கு சறுக்கலாக அமைந்துவிட்டது.

அடிப்பட்ட சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு காட்டியது இந்திய அணி. 

4 டெஸ்ட் போட்டியில் ஒரு போட்டியில் கூட இந்தியா வெல்லாது என ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் கூறினர்.  ‘பிங்க்’ டெஸ்ட் போட்டியும் இவர்களின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது.

2வது டெஸ்ட் போட்டியில் கோலி,  முகமது சமி இடம் பெறாததால் இந்திய அணிக்கு வெற்றி முகமே இருக்காது என கணித்தனர். கேப்டன் பொறுப்பேற்ற ரஹானே கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கினார்.

முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு ஆல் அவுட் செய்து  பாராட்டு மழையில் நனைந்தார் ரஹானே. பின்னர் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடி 326 ரன் எடுத்தனர். ரஹானே 100 ரன்னும், ஜடேஜா அரை சதமும் அடித்தனர். 2 வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர்களால் பெரிதாக ரன்களை சேர்க்க முடியவில்லை. 200 ரன் மட்டுமே சேர்த்தனர். 

துவக்கத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது.  2 இன்னிங்சையும் சேர்த்து  பூம்ரா 6 விக்கெட்டும், சிராஜ், அஷ்வின் 5 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்திய அணியின் பந்துகளை ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறிய போது ‘ஆஹா… ஆஹா… நம் வீரர்களா  இப்படி வீசுகிறார்கள், இப்படியே எல்லா போட்டியிலும் வீசினாள் எப்படி இருக்கும்’ என்ற நினைப்பே 2வது டெஸ்ட் போட்டியை பார்த்த அனைவருக்கும் இருந்திருக்கும்.

பிப்ரவரியில் நடந்த நியூசிலாந்து தொடரிலும் இந்திய அணி டி20 தொடரில் மட்டுமே வென்றது. ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரிலும்  இதே தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஒருநாள் ,டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த இரண்டு தொடர்களும்  சுட்டிக்காட்டியுள்ளது. இதை கேப்டன் கோலி பரிசிலீனை செய்வாரா?


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *