14 ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்று கஷ்டப்பட்டதை இதிகாசங்கள் கூறுகின்றன. கொண்டாடுகின்றன . ஆனால் எந்த ஒரு குற்றமும் செய்யாமல், – எதற்காக இப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்வதற்கே மொகமது ஆமிர் கானுக்கு 14 ஆண்டுகளாகி இருக்கிறது . இவர் எழுதியுள்ள தன்வரலாறு – ‘பயங்கரவாதி என புனையப்பட்டேன்’ நூலை படிக்கிறபோது கற்பனை ராமனின் துயரத்தை விஞ்சி நிற்கிற ஆமீர் கான் கதை நம்மை உறைய வைக்கிறது .
பழைய தில்லியில் ஆமிர் தனது அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். அவருக்கு பொழுதுபோக்கு என்றால் பட்டம் விடுவது, சினிமா பார்ப்பது. கராச்சியில் உள்ள தனது அக்காவை பார்க்க ஆசைப்படுகிறார். இதற்கு அவரின் அப்பா ஏற்பாடு செய்கிறார். சிறுவர்களுக்க வெளியூர் செல்வது என்றாலே ஆனந்த கடலில் ஆட்டம் போடுவார்கள். அப்படித்தான் அவனின் மனதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. ஆமிரை குப்தாஜி (இந்திய உளவு பிரிவை சேர்ந்தவர்) சந்திக்கிறார். நமது இந்திய தேசத்திற்காக நீ ஒரு ‘தேசபக்திமிக்க’ செயல் செய்ய வேண்டும் எனக் கேட்கிறார் . அது, “ பாகிஸ்தான் கடற்படைத்தள அலுவலகத்தை புகைப்படம் எடுப்பது,மேலும் சவுத்திரி என்பவரை சந்தித்து அவர் கொடுக்கும் ஆவணத்தை எடுத்து வருவது” என்பது தான். இதை நீ செய்து முடித்தால் உனது குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பும், நிதி உதவியும் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். இதை நன்றாக முடித்துவிட்டால் தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துவிடும் என்ற ஆசையால் இதற்கு ஆமிர் சம்மதிக்கிறார்.
1997 டிசம்பர் 12ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலைப்பிடித்து கராச்சி செல்கிறார். அங்கு ஒன்றரை மாதங்கள் அக்கா குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்போது சில நேரங்களில் குப்தாஜி சொன்னதை செய்து முடிக்கவேண்டும் என்பதால், ஆமிரின் மனம் ஜேம்ஸ்பான்ட் போல சிந்திக்கும். பாகிஸ்தான் கடற்படை தளத்தை புகைப்படம் எடுக்க செல்கிறார் ஆமிர். ஆனால் அங்கு இருக்கும் பாதுகாப்பை பார்த்தவுடன் கைகள் நடுங்க, மனம் பதட்டம் அடைய, நமக்கு ஜேம்ஸ்பான்ட் வேலை செட் ஆகாது என முடிவு செய்து புகைப்படம் எடுக்காமல் வீடு திரும்பிவிடுகிறார். பிறகு சவுத்திரியை சந்தித்து அவர் கொடுக்கும் ஆவணங்களை எடுத்துக் கொண்டு இந்தியா வருகிறார் ஆமிர். வாகா ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையை கண்டு ஆஞ்சிய அவர் ஆவனங்களை கழிவறையில் வீசிவிட்டு மன பதற்றம் தணிந்து தில்லிவந்துவிடுகிறார்.
குப்தாஜியை சந்தித்து நடந்தவைகளை கூறுகிறார். ஆனால் அவர் இதை ஏற்க மறுக்கிறார். ‘ நீ பாகிஸ்தான் உளவாளி’ என அவர் கூறுகிறார். ஆனால் ஆமிர் இதை அவர் ஏதோ கோபத்தில் கூறுகிறார் என சாதாரனமாக நினைத்துவிடுகிறார்.
1998ஆம் ஆண்டு, வீட்டின் அருகே உள்ள மசூதிக்கு இரவு நமாசுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஆமிரை யாரோ கடத்துகிறார்கள். அது யார் என்றால், இந்திய உளவுத்துறையும், வெளி மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை விசாரிக்கும் பிரிவும்தான். இவர்கள் 8 நாட்கள் ஆமிரை அடைத்துவைத்து அவன் மீது பயங்கரமான தாக்குதலை நடத்துகின்றனர். பின்னர் 150 வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கி; நாட்குற்ப்புகளில் அதிகாரிகள் சொல்வதை அவன் கைப்பட எழுதவைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 24 குண்டு வெடிப்பு வழக்குகள் அவன் மீது புனையப்பட்டு, இவன் பாகிஸ்தான் உளவாளி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்கின்றனர். எத்தனை இஸ்லாமிய இளைஞர்கள் ‘தேசத்திற்காக’ என்ற ஒற்றை வார்த்தையை நம்பி ஏமாந்து ஆமிரை போல் இன்னும் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்களோ என்ற எண்ணம் நூலை படிக்கும் போது வாசகர்களுக்கு வராமல் இருக்கவே முடியாது.
சிறை அவனுக்கு எத்தனையோ கற்றுக்கொடுக்கிறது. பல நன்பர்கள் அங்கு அவனுக்கு கிடைக்கிறார்கள். ஆனால், அவன் ‘பயங்கரவாதி’ என்ற காரனத்தால் பலர் அவன் அருகே வருவதற்கே அஞ்சுகிறார்கள். சில கைதிகள் செய்யும் கொடுமைகளிலிருந்து அவன் தப்பித்து கொள்ள இது அவனுக்கு உதவியாக இருக்கிறது. சில சிறை அதிகாரிகளின் உதவியால் ஆமிர் கல்வி கற்கிறான். இந்த கல்விதான் அவனுக்கு உத்திரபிரதேச சிறையில் பயன்படுகிறது.
உத்திரபிரதேசத்தில் எதற்கு எடுத்தாலும் லஞ்சம். சிறையில், வார்டன் ஆமிரை பெருக்க சொல்கிறார். அதற்கு ஆமீர் விசாரணை கைதிகள் பெருக்ககூடாது என்று சட்டம் இருக்கிறது என்கிறான். இதை கேட்ட அவர் மீண்டும் அவன் பேச்சுக்கே செல்லவில்லை.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி நியூயார்க் நகர் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டது, டிசம்பர் 13ந்தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகள் உட்பட, 10 வழக்குகளில் ஆமிரை விடுதலை செய்த நீதிபதி, ஒரு வழக்கில் ஆமிர்தான் குற்றவாளி என தீர்ப்பு எழுதிவிடுகிறார். சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
2005ஆம் ஆண்டு கோட்லா மைதானத்தில் நடக்கவிருந்த இந்தியா – பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் தடுக்க மைதானத்தை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சிவசேனை ஆட்களுக்கு திஹார் சிறையில் ராஜமரியாதை வழங்கப்பட்டது. 1980களின் மீரட் கலவரங்களில் பல இசுலாமியர்களை படுகொலை செய்த பி.ஏ.சி உறுப்பினர்கள் தண்டனைக்குள்ளாகாமல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்த வித குற்றமும் செய்யாமல் சிறையில் அவதிப்படும் இஸ்லாமியர்களும், வெளியே இருப்பவர்களும் தினம் தினம் அச்சத்தோடுதான் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்பதை ஆமிர் வாழ்க்கை மூலம் உர்க்கக் கூறுகிறது நூல்.
தனக்கு என்ன நேர்ந்துள்ளது என்றே அறியாமல் அப்பாவி இளைஞனாக உள்ளே சென்ற அவன் 14 ஆண்டுகள் தன்னம்பிக்கையுடன் போராடி அனைத்து வழக்குகளிலிருதும் குற்றமற்றவன் என நிருபித்து வெளியேவந்தான். ஆனால் வெளியேவந்தபோது அவன் பார்த்த தில்லியாக இப்போது இல்லை. எத்தனையோ மாற்றங்களை கண்டுவிட்டது என்பதை அவன் உனர்ந்தான். நீதி மன்றம், வீடு என அலைந்த அப்பா உயிரோடு இல்லை. அம்மா கை, கால்கள் முடங்கி படத்தபடுக்கையாக இருக்கிறாள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற தன் நம்பிக்கையுடன், தான் சிறையிலிருக்கும் போதே காதலித்த அலியாவை திருமணம் செய்து கொண்டான் ஆமிர் . ஒற்றுமையில் வேற்றுமையை தேட நினைப்பவர்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
வன்கொடுமையில் ஈடுபடும் போலீசை கால்துறை என்று மொழிபெயர்ப்பதை வெறுக்கிறேன். அத்தகைய போலீஸ் அதிகாரிகளை போலீஸ் அதிகாரி என்று போலீஸ் என்றே குறிப்பிடுகிறேன். மற்ற இடங்களில் காவல்தறை என்று குறிப்பிடுகிறேன் என்று நூலின் மொழிபெயர்ப்பு குறிப்பில் அப்பணசாமி கூறியிருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு அவர் மனம் கோவமடைந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூலை படிக்கும் போது நமக்கும் அதே கோபத்தை தமிழ்மொழியில் நமக்கு ஊட்டியிருக்கிறார்..
பாஜக அரசு இஸ்லாமிய வெறுப்பை இடைவிடாது ஊதிப்பெருக்க – கலவர நெருப்பைப் பற்றவைக்க முயன்று கொண்டே இருகிறது ; ஆனால் இந்த மண்ணின் மதச்சார்பின்மையும் மனிதமும் அதைத் தடுக்க போராடிக்கொண்டே இருக்கிறது . அத்தகு போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் உண்மைக் கதையாய் இந்நூல் உள்ளது . படியுங்கள் .பரப்புங்கள் .
Leave a Reply