ஒரு கனிக்காகக் காத்திருந்து அதைச் சாப்பிடுகையில் அதன் ருசியே தனி. அப்படி நீண்ட காத்தலுக்கு பிறகே பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கனியைப் புசித்திருக்கிறார் பி.வி.சிந்து.
2017, 2018ல் இறுதிப்போட்டி வரை வந்து தங்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கத்துடனே நாடு திரும்பினார். 2016 இருந்து பல்வேறு போட்டிகளில் 10 முறை இறுதிப்போட்டிக்குச் சென்றாலும், சிந்துவால் தங்கம் வெல்ல முடியவில்லை. பதக்கமே வெல்ல முடியாத நமக்கு ஏதோ ஒரு பதக்கம் கிட்டினால் மகிழ்ச்சிதானே.
ஆனாலும், இவரால் தங்கம் ஏன் வெல்ல முடியவில்லை என்ற ‘அம்பு’ ரியோ ஒலிம்பிக்கிலிருந்தே துரத்தியது. அவ்வப்போது இதை தடுத்து வந்த சிந்து, சுவிட்சர்லாந்தில் தனது ராக்கெட் மட்டையால் தங்கம் வென்று தன் மீது ஏவிய அம்புகளை எல்லாம் உடைத் தெறிந்தார்.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் பேசில் நகரில் உலக சாம்பியன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார் பி.வி.சிந்து. இரண்டு ஜாம்பவான்கள் மோதுவதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 38 நிமிடங்களிலே போட்டியை முடித்தார். மேலும் முதல் முறையாகத் தங்கம் வென்ற இந்தியப் பெண் என்ற வரலாற்றையும் படைத்தார்.
2017 ஆம் ஆண்டே தங்கம் சிந்துவிற்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒகுஹாராவால் நழுவி விட்டது. இம்முறையோ அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என்பதை ஒகுஹாராவுக்கு காட்டினார்.
இறுதிப்போட்டி எளிதில் முடிவதற்குக் காரணமே சிந்து ஒகுஹாராவுடன் 10 முறை மோதியதில் 5 முறை வெற்றி கண்டுள்ளார். இதனால் இவரின் ஒவ்வோர் அசைவும், போராட்ட குணமும் நன்றாகச் சிந்துவிற்குத் தெரியும். இதனை உணர்ந்ததால், “ஜப்பான் வீரர்கள் மைதானத்தில் நீண்ட நேரம் போராடக்கூடியவர்கள். ஒரு மதிப்பெண்ணுக்காக நீண்ட நேரம் ராக்கெட் மட்டையை சுழற்றுவார்கள். இதனால் தான் துவக்கத்திலேயே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினேன்” என்கிறார் சிந்து.
உலக பேட்மிட்டன் சாம்பியன் போட்டியில் 2 வெண்கலம் 2 வெள்ளி 1 தங்கம் என 5 பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்கார் இவரே.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று பேட்மிட்டனை இந்தியாவில் பிரபலப்படுத்தினார் சாய்னா நேவால். அதன் பிறகு பெரிதாக இவரால் ஜொலிக்க முடியவில்லை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மீது எதிர்ப்பார்ப்பு அதிகமானது. இதற்கு ஏற்ப தன்னை நிறுபித்து வந்த அவர், உலக பட்டத்தையும் கைபற்றி, 2020 ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதற்கு சிந்து ‘வைட்டிங்’…
45 ஆண்டுக்குப் பின்….
உலக பேட்மிட்மிட்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1983 ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் பிறகு யாராலும் பதக்கத்தின் அருகே கூட வரமுடியவில்லை. கிரிக்கெட்டில் கபில்தேவ் உலகக் கோப்பை வென்று வரலாறு படைத்தார். மீண்டும் எம்.எஸ்.தோனி புதிய வரலாறு படைத்தார். அதுபோல் பேட்மிட்டனில் 45 ஆண்டு காத்திருப்பிற்குப் பின் சாய்பிரினீத் வெண்கலம் வென்றுள்ளார். மேலும் உலக தரவரிசையில் 19 ஆது இடத்தில் உள்ளார். இந்த வெற்றி பிரனீத் பேட்மிட்டன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்தியாவில் பேட்மிட்டனின் முகமாகச் சிந்து இருப்பதற்குப் பயிற்சியாளர் கோபிசந்த் காரணம் என்றால் அது மிகையாகாது. தான் விட்டதை தன் பயிற்சியால் சாதித்து வருகிறார்.
உலக தரவரிசையில் சிந்து 5வது இடத்திலும், சாய்னா நேவால் 8 வது இடத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் பிரிவில் தங்கம் வெல்லுவதற்கு இவர்கள் இருவரை மட்டுமே தயார் படுத்தினால் போதாது. மேலும் சில வீரர்களைக் கண்டு, அவர்களையும் உற்சாகப் படுத்த வேண்டும். அதேபோல் கோபிசந்த் பயிற்சி குழுவிலிருந்துதான் வீரர்கள் பதக்கம் வெல்லுகிறார்கள்.
எனவே கோபிசந்த் போல் இன்னும் பல பயிற்சியாளர்களை இந்திய விளையாட்டுத் துறை கண்டெடுக்க வேண்டும். இல்லை என்றால் சாய்னா, சிந்துவின் சகாப்தத்தோடு பேட்மிட்டன் முற்றுப் பெறும்?
Leave a Reply