தங்கல்

மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் மஹாவீர் சிங் (அமிர்கான்). ஆனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. தேசிய வீரராக தன் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்.  தான் தங்கம் வாங்க வில்லை என்றாலும் தனக்கு பிறகுக்கும் ஆண் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கித்தர நினைக்கிறார்.  அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்ததால் தன் லட்சியத்தையும், ஆசையையும் இரும்பு பெட்டியில் பூட்டிவிடுகிறார்.

ஒருநாள், கீதா, பபிதா என்ற அவரின் சிறுமிகள் இரண்டு ‘ஆண்’ பையன்கள் கிண்டல் செய்ததற்காக அவர்களை தும்சம் செய்து விடுகிறார்கள்.  அப்போது தான் அமீர்கானுக்கு ‘பெண்’கள் சமைப்பதற்கானவர்கள் இல்லை என புரிகிறது. நான் ஆசைப்படுவது இந்தியாவிற்கு ஒரு ‘தங்கம்’ தான். அதை ஆண் வாங்கினால் என்ன பெண் வாங்கினால் என்ன. தங்கம் எப்படி கிடைத்தாலும் அது தங்கம் தானே  என நினைக்கிறார். அடுத்த நாளே கீதா, பபிதா இருவருக்கும் மல்யுத்த பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த பயிற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அமீர்கானின் லட்சியம் என்னவானது என்பது படத்தின் மீதி கதை. 

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மஹாவீர் சிங், கீதா, பபிதா ஆகியோரின் உன்மை  வரலாற்றை சொல்லும் படம் தான்  தங்கல். அவர்கள் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை நமக்கு அமீர்கான் மூலம் கொடுத்துள்ளார் இயக்குநர் ரிதேஷ் திவாரி.

கீதா, பபிதா ஆகியோருக்கு பயிற்சி கொடுக்கிறார் அமீர்கான். ஆனால் அவர்கள் தந்தையின் சொல்லுக்காக பயிற்சியில் ஈடுபடுகிறார்களே தவிர மனதளவில் அவர்கள் உணரவில்லை. இதனால் அவர்களின் தோற்றத்தை மாற்றுகிறார் அமீர். 

முதல் போட்டியில் ஒரு ஆணை தூக்கி தரையில் போட்டபிறகு தான் கீதாவின் மனதில் உள்ள ‘பெண்’ என்ற பிம்பம் உடைகிறது.  அதனால் தான் அடுத்தபோட்டி எப்போது என தந்தையிடம் கேட்பார்.   எந்த ஒரு துறையாக இருந்தாலும் பெண்களுக்கு முதலில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதளவில் அதில் வெற்றியடைய முயல்வார்கள் என்பதை கூறுகிறது இந்த காட்சி.

ஆண்டாண்டு காலமாக இருக்கும் சடங்குகளை மீறும் போது முதலில் நமக்கு தலைகுனிவுதான் ஏற்படும். அதில் தொடர் வெற்றிகளை குவித்தால் அதே வீதிகளில் தலை நிமிர்ந்து நடக்கமுடியும்  என்பதை கீதாவின் ஒவ்வொரு வெற்றியும் நமக்கு உணர்த்துகிறது.

கீதாவிற்கு விளையாட்டுத்துறை சார்பில் உதவ வேண்டும் என அரியானா அதிகாரிகளிடம் கேட்பார் அமீர்கான். அப்போது அந்த அதிகாரி, ஒவ்வொரு விளையாட்டிற்கும் எப்படி நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை சொல்லுவார். அதிலும் பெண்களுக்கு நி(நீ)தி ஒதுக்கப்படுவது என்பது கடுகு அளவில் தான் என்பார். அந்த காட்சி, விளையாட்டு துறையில் உள்ள அதிகாரிகளின் மனசாட்சி. 

பெண் குழந்தைகளுக்கான எதிர்காள திட்டங்கள்; வறுமையில் வளரும் வீரர்கள்; பயிற்சியும்; முயற்சியும், எவ்வளவு அவசியம் என படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நாவல்.

குழந்தைகள் மீது அன்பை காட்டுவதாகட்டும்; பயிற்சியாளராக நடந்து கொள்வதாகட்டும்; தன் மகளிடம் மூச்சிறைக்க மல்யுத்தம் செய்வதாகட் டும் அனைத்திலும் தான் ஒரு ஸ்டார் நடிகர் என்ற பிம்பத்தை துடைத்தெரிந்திருக்கிறார். 

கீதாவாக(பாத்திமா சானா ஷேக்), பபிதாவாக (சனிய மல்கோத்ரா),  சிறுவயது சிறுமிகளாக வரும் சாய்ரா வாசிம், சுஹானி பட்நாகர்   ஆகியோர் நிஜ மல்யுத்த வீரர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

அரியானாவின் அழகு, மல்யுத்த போட்டியின் காட்சி  என ஒளிப்பதிவில் அனைவரையும் ஆச்சரியப் படவைத்துவிட்டார் சேது ஸ்ரீராம்.

விளையாடும் போது அந்த மேட்டில் வரும் கிரிச், கிரிச் சத்தம் என நுணுக்கமாக இசை அமைத்துள்ளார் பிரீத்தமின்.

விளையாட்டின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட மல்யுத்தத்தின் விதிமுறைகளை தெரிந்து கொள்ள வைத்துள்ளது இந்த ‘தங்கல்’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *