தல தப்புமா தலைக்கு?

ஏப்ரல் 5ந் தேதி வண்ணமயத்துடன் ஐதராபாத்தில் துவங்கிய 10வது ஐபிஎல் போட்டியைப் பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். பிறகு ஒரு நாயகனின் எதிர்காலம் தொடருமா? என்பதைப் பற்றியும் பார்ப்போம்.  

10வது ஐபிஎல் போட்டி ஐதரபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் மே 21ந்தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட 60 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் முறையாகத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இப்போட்டி நடத்துவதற்கு காரணம் இந்திய அணிக்கு இளம் வீரர்களை தேர்வு செய்வதுதான்  பிரதானமான ஒன்று. இப்படி தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளின் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொண்டனர் ரகானே, பாண்டியா, பூம்பா போன்ற சில வீரர்கள்.  

தற்போது  10வது ஐபிஎல் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார் நட்ராஜ். அதேபோல் ரைசிங் பூனே ஆப்பர் ஜெய்ன்ட் அணியில் வாசிங்டென் சுந்தர் விளையாடுகிறார்.  இவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள் என்றால் இந்திய அணியின் கதவு இவர்களுக்குத் திறப்பதற்கு வாய்ப்புள்ளது. 

ஐபிஎல் போட்டி இளம் வீரர்களுக்கு நல்வாய்ப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது தான். ஆனால் பணம் என்ற விளையாட்டுத்தான் இதில் அதிகமாக விளையாடுகிறது. மேட்ச்பிக்சிங் கண்டு பிடிக்கப்பட்டதால் சென்னை அணி தடைசெய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டு வீரர்களும் தங்கள் நாட்டிற்காக விளையாடாமல் பணத்திற்காக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்கள் என்ற சர்ச்சைகளும்  எழுந்து கொண்டேதான் வருகிறது. விளையாட்டில் திறமைக்கு மதிப்புக் கொடுத்தால் நமக்கு பல சச்சின்கள் கிடைப்பார்கள். 

இந்திய அணியில் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள சுரேஷ் ரய்னா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரத்திற்கு மேல் ரன் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இவர் இத்தொடரில் இன்னும் சிறப்பாக தன் விளையாட்டை வெளிப்படுத்தினார் என்றால் கட்டாயம் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.  

தொடர்ந்து ஐபிஎல்-லில் விளையாடி வரும் கிருஸ்கெய்ல் 262 பந்துகளை சிக்சராக பறக்கவைத்துள்ளார்.

இத்தொடரின் ஒரு போட்டியில் குஜராத் அணியும்,கோல்கட்டா அணியும் மோதின.இதில் குஜராத் நிர்ணயித்த 184 ரன்களை கோல்கட்டா  அணி ஒரு விக்கட்டை கூட பறி கொடுக்காமல் 184 இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.  

ரிஷப்பந்த், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் விக்கட் கீப்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமைகளை அழகாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால்  தோனியின் இடத்தை இவர்களில் ஒருவர் தான் பிடிக்கப்போகிறார் என்ற பேச்சும் ஆரம்பமாகிவிட்டது. 

இப்படி பல வீரர்கள் சாதனைகளை படைத்து வருகிறார்கள்.  இந்திய அணி பல சாதனைளை முத்தமிட்டதற்கு அம்பாக இருந்த தோனிக்கு இத்தொடர் சோதனையாக அமைந்துள்ளது.

சென்னை அணி தடைசெய்யப்பட்ட பிறகு பூனே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. 2016ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இவர் தலைமையிலான அணி 14 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அவர்களுக்கு 7வது இடம் தான் கிடைத்தது. 

இதனால், இந்த ஆண்டு பூனே அணி நிர்வாகத்தினர் தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தனர். இதிலிருந்தே துவங்கிவிட்டன தோனிக்கான சர்ச்சைகள். 

ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 84 ரன்களை எடுத்து அணியின் வெற்றியின் கணக்கை துவக்கினார். இதனை பூனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சகோதரர் ஹர்ஷ் கோயங்கா தனது ‘டுவிட்டரில்’ தோனியை மிஞ்சிவிட்டார் ஸ்மித். யார் ராஜா என்பதை இவர் நிரூபித்து விட்டார் என பதிவிட்டிருந்தார்.  இந்தப் பதிவு, புகைத்து கொண்டிருந்ததில் மேலும் எண்ணெயை ஊற்றிய கதையாக மாறிவிட்டது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “ பறவை உயிருடன் இருக்கும் போது எறும்பை உண்ணும். பறவை இறந்தபின் அதை எறும்பு உணவாக உட்கொள்ளும். இது தான் விதி. காலமும், நேரமும் எப்போது வேண்டுமானாலும் மாறும். யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம். தற்போது நீங்கள் வலிமையானவராக இருக்கலாம். உங்களை விட காலம் தான் உயர்ந்தது என்பதை மறக்க வேண்டாம்’ என தோனியின் மனைவி  சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 

ஒரு போட்டியில் ஸ்மித் விளையாட முடியாமல் போனது. அப்போது தோனி தான் கேப்டன் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தோனிக்கு பதிலாக ரகானேவுக்னே கேப்டனாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. 

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், தோனி அடித்த சிக்சர் மைதானத்தின் மேற்கூரையில் சென்று விழுந்தது. இதை தோனியின் ரசிகர்கள் பூனே நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “ தோனி அடித்த சிக்சர், பூனே அணி உரிமையாளர் கோயங்கா வீட்டில் விழுந்தது” என கிண்டல் அடித்து பதிவிட்டிருந்தனர்.  இப்படியான பிரச்சனைகளை பார்க்கும் போது தோனி ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. 

ஐதரபாத் அணியுடன் விளையாடும் போது, 3 ஒவரில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி, நான் தான் திறமையான பினிஷர் என்பதை தோனி நிரூபித்து காட்டினார்.  இந்த போட்டியில் 34 பந்தில்61 ரன்களை எடுத்திருந்தார். இவரின் ரசிகர்களுக்கு இந்த போட்டி ஒரு கொண்டாட்டமாக இருந்தது. தல எப்போதும் தல தான் என இணையத்தில் இவரின் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.  ஆனால் பூனே உரிமையளர்களோ தோனியிடமிருந்து இதைத் தான் எதிர்பார்க்கிறோம் என சப்பைக்கட்டு கட்டியுள்ளனர். 

2015ம் ஆண்டிலிருந்தே தோனி தொடர்ந்து சர்ச்சைகளில் கிக்கிய வண்ணமாகவே இருக்கிறார். ஒரு பேட்டியின் போது கூட நிருபர் ஒருவர் எப்போது ஓய்வு என கேட்டதற்கு அவரை வாட்டி வதைத்து விட்டார் தோனி. அப்போதே தோனியின் ஓய்வு காலம் நெருங்கிவிட்டது.  

என்னதான் தோனி தற்போது சரியாக விளையாடவில்லை என்றாலும் இவர் இந்திய அணிக்கு செய்த சாதனைகளை யாரும் மறக்க முடியாது. இந்திய அணியில் இடம் பிடித்த எந்த கேப்டனும் செய்யாத சாதனையை செய்த ஒரே கேப்டன் தோனி என்றால் அது மிகையாகாது.

2007-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தோல்வி, கிரெக் சாப்பல் ஊதிப்பெருக்கிய சர்ச்சைகள் என்று தடுமாறிக் கொண்டிருந்த போது கேப்டனாக்கப்பட்ட தோனி, முதல் டி20 உலகக்கோப்பையை வென்று தன்னம்பிக்கை இழந்து கொண்டிருந்த வீரர்களுக்கும் ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தார். 

2008-ம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முதலாக ஆஸ்திரேலியாவை 3 இறுதிப் போட்டிகளில் 2-ல் தொடர்ச்சியாக வென்று கோப்பையைக் கைப்பற்றினார். 2011 உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் வெற்றி என்று தோனியின் கேப்டன்சி சாதனைகளை அடுக்கலாம். 

டெஸ்ட் போட்டிகளிலும் அதிக வெற்றியுடன் நம்பர் 1 கேப்டனாகவே திகழ்ந்தார் தோனி. 60 போட்டிகளில் இவர் 27 போட்டிகளில் தன் தலைமையில் வென்றுள்ளார். மொத்தம் 191 ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையில் இந்திய அணி 104 போட்டிகளில் வென்றுள்ளது. 

டி20 போட்டிகளில் ரிக்கி பாண்டிங்குக்கு இணையாக 63 போட்டிகளில் 36 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 2009-ம் ஆண்டு தோனியின் கேப்டன்சியில்தான் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்தது. பிறகு 2010-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி தலைமையில் இந்தியா 1-1 என்று தொடரை சமன் செய்ததோடு, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-1 என்று தோனி தலைமையில் இந்திய அணி சமன் செய்தது. இப்படி பல சாதனைகளை தோனி தலைமையிலான அணி சாதித்துக் காட்டியுள்ளது. 

சச்சின், கங்குலி போன்ற நட்சத்திர வீரர்களும் தங்களுடைய இறுதி நாட்களில் இப்படியான சர்ச்சகளை சந்தித்தவர்கள் தான். தோனி டெஸ்ட் தொடரில் சரியான நேரத்தில் ஓய்வு  என அறிவித்த போது நல்ல வரவேற்பு அனைவர் மத்தியிலும் கிடைத்தது. தற்போது அவர்  ஒருநாள், டி.20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதில் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும் வயது, தொடர்ச்சியான போட்டிகளில் வினையாடுவதால் ஏற்படும் உடல்-மன சோர்வு. காயங்களால் அவதிப்படுவதை தடுக்க முடியாது. இதனால் திறமையான ஆட்டத்தை இழந்து தடுமாறுவதையுத் தவிரக்க முடியாது. தோனியும் தற்போது இப்படியான சூழ்நிலையை தான் எதிர் நோக்குகிறார்.

தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி, இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ள சாம்பியன் டிராபியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி என்றும் ‘நான் தான் தல’ என நிறுபித்தால் தோனிக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புல்லது. 

இன்னும் எத்தனை காலம் தோனி தாக்குப்பிடிக்க முடியும், அடுத்தவர்களுக்கு வழிவிட்டு அவர் ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான் எனத் தொடர்ந்துவரும் எதிர்மறைக் கருத்துகளுக்கு அவர் நம்பிக்கையுடன் சொல்லும் பதில், ‘ஒரு நாள் உலகக் கோப்பை, டி-20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி… இந்த மூன்று உலகக் கோப்பைகளையும் மீண்டும் ஒருமுறை ஜெயிக்க வேண்டும். முடியாதா என்ன?!’ இதற்கு காலம் தான் பதில் சொல்லும்?


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *