நவம்பர் மாத விளையாட்டுகள் குறித்து ஒரு உலா….
நவம்பர் மாதம் கிரிக்கெட், பேட்மிண்டன், தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் சில முக்கிய சாதனைகளை மட்டும் நாம் பார்ப்போம்.
சிங்கப் பெண்ணே…
சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் 3 தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி.
17 வயதான இளம் பெண் சிங்கம் மனு பக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.7 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
இந்த வருடத்தில் அதிகம் உச்சரித்த பெயர் இளவேனில் வாலறிவன். ஹா… என்ன அழகான தமிழ்ப் பெயர் என்றும், வாலறிவன் என்ற சொல்லுக்குப் பலர் அர்த்தமும் தேடினர். தற்போது மீண்டும் ஒரு முறை இந்தப் பெயர் உரக்க ஒலித்துள்ளது. இதற்குக் காரணம் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று முதல் இடம் பிடித்துத்தான்.
இளவேனில், ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, உலக தரவரிசையில் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யான் சிங் பன்வாரும் தங்கப் பதக்கம் வென்றார். இந்த இளம் வீரர்கள் இன்னும் சாதனை படைக்கச் சிவப்பு கம்பலம் விரித்து வரலாறு வரவேற்கிறது.
புதிய நம்பிக்கை…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஸ்காட்டிஸ் ஓபன் பேட் மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், பிரேசில் வீரர் யாகோர் கோயல்ஹோவை எதிர்த்து விளையாடினார். 56 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் லக்சயா சென் 18-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.
உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான லக்சயா சென் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 4 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சார்லார்லக்ஸ் ஓபன், டச்சு ஓபன், பெல்ஜியன் இன்டர்நேஷனல் , தற்போது ஸ்காட் டிஸ் ஓபன் என லக்சயா சென வெற்றி பயணம் தொடர்கிறது.
பாரா ஒலிம்பிக்கிற்கு…
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் துபாயில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றனர்.
‘பிக்ங்’ டெஸ்ட்….
வங்கதேச அணியுடன் டி. 20, டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதாக கைபற்றியது.
கொல்கத்தாவில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இதற்காக ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்பட்டது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதை இசாந்த் சர்மா பெற்றார். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். இவர்கள் 3 பேரும் சேர்ந்து இரு இன்னிங்ஸிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இந்தியாவின் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல் முறையாகும்.
சுழற்பந்து வீச்சாளர்கள் யாவரும் விக்கெட்டை எடுக்கவில்லை. பிங்க் பந்தில் ஏன் விக்கெட் எடுக்க வில்லை என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பிங்க் பந்தில் தனது முதல் சதத்தை அடித்து சாதனைப் படைத்தார் வீராட் கோலி. மேலும் அவரது 27 ஆவது டெஸ்ட் சதமாகும். கேப்டனாக அடிக்கும் 20 ஆவது டெஸ்ட் சதமும் கூட. சர்வதேச அளவில் இது கோலியன் 70ஆவது சதம்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 505 போட்டிகளில் 70 சதங்களை அடித்தார். ஆனால் விராட் கோலியோ 438 போட்டியிலேயே 70 சதத்தைத் தொட்டு விட்டார்.
இந்திய அணி தொடர்ச்சியாகப் பெறும் 7-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பகலிரவு டெஸ்ட வரலாறு
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு முன்பே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவு அணிகள் பகலிரவு டெஸ்ட் விளையாடி இருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி தான் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின.
இந்தியா விளையாடியதுடன் சேர்த்தால் மொத்தம் 12 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு பிசிசிஐ-யின் புதிய தலைவர் சவ்ரவு கங்குலி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
‘டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கொண்டு செல்ல பகலிரவாக நடத்தப்பட்டாளும், இதில் வீரர்களின் உடல் நலத்தையும், மைதானத்தின் தன்மையை அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்கிறார் முன்னாள் வீரர் சச்சின்.
‘தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு வீரரும் ஒருநாள் முழுக்க பேட் செய்வது கிடையாது. பந்து வீச்சாளர்களும் சோர்வடைந்து விடுகிறார்கள். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற உடல் தகுதி வேண்டும்’ என்கிறார் சச்சின்.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்
தாய்லாந்தின் பாங்காக் நகரில் 21 ஆவது ஆசிய வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் அபிஷேக் – ஜோதி சுரேகா வென்னாம் இணை 158 – 151 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் தைபே இணையை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றது.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் வென்ற ஓரே தங்கம் இதுவாகும்.
ஆடவர் காம்பவுண்ட் அணி பிரிவில் இந்தியாவின் அபிஷேக், ரஜத் சௌஹான், மோகன் பரத்வாஜ் இணை 232-233 என்ற புள்ளிக்கணக்கில் கொரியாவின் ஜேவோன், யாங்கி, இயுன் கியு சோய் இணையிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
மகளிர் பிரிவிலும் ஜோதி, முஸ்கான் கிர் பிரியா இணை 215-231 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்து, வெள்ளி வென்றது.
Leave a Reply