நாங்களும் சாதனையாளர்கள் தான்

பெண்களின் சாதனைகள் இங்கு பெரிதாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் விளையாட்டுத்துறையில் பெண்கள் என்னதான் சாதனைபடைத்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ஒப்புக் கொண்ட பரிசுத் தொகையை இன்னும் வழங்கவில்லை.

இப்படி மன – உடல் ரீதியாக எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள் என்றால் அது மிகையாகாது. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் தான் இந்திய நாட்டிற்காக பதக்கத்தை வாங்கி நமக்கு பெருமையை சேர்த்தார்கள். 

விளையாட்டின் பல பிரிவுகளில் பெண்கள் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கிறோமே தவிர அவர்களது  திறமைகளை மதிப்பது கிடையாது.  சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்று பெண்கள் விளையாட்டில் டாப் 10 அழகிகள் யார் என சர்வே எடுத்து அதை  வெளியிட்டுள்ளது. அதுதான்  அவர்களுக்கு செய்யும் பாராட்டா ?

செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், செரபோவா, சானியா மிர்சா, சிந்து, சாக்ஷி மாலிக், தீபிகாகர்மேக்கர், தீபிகா பல்லிகல் என பலர் தங்கள் விளையாட்டில் நட்சத்திரங்களாக உலகத்தில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இருப்பார்கள். இதை மறுக்கவும்; மறைக்கவும் முடியாது.

இந்நிலையிலேயே மகளிர் கிரிக்கெட்டைப் பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். கிரிக்கெட் விளையாட்டில் ஆண்கள் விளையாடுவது பற்றி நமக்கு தெரியும். கடந்த மாதம் நாம் பார்வையற்றோர் கிரிக்கெட் பற்றி பார்த்தோம். இப்போது மகளிர் கிரிக்கெட்டைப் பற்றி பார்க்கலாம். (“என்னடா இவன் கிரிக்கெட் விளையாட்டை பத்தியே பேசிக்கிட்டிருக்கான” என நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே கேட்கிறது)

1765ம் ஆண்டு ஜூலை மாதம் 26ந்தேதி “ தி ரீடிங் மெர்குரி” என்ற நாளிதழ் வெள்ளை துணி அணிந்து பிராம்லிங் அணியும், ஹோம்பிள்டன் அணியும் முதல் முறையாக  கிரிக்கெட் விளையாடியதைப் பதிவு செய்தது.

பின்னர் முறையாக 1887ம் ஆண்டு வைட் ஹீதர் கிளப் என்ற  பெயரில் முதல் மகளிர் கிரிக்கெட் கிளப் உருவானது.  இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் கிளப், தென் ஆப்ரிக்க போர்ட் எலிஸபெத்  கிளப் என பல நாடுகளிலும் மகளிர் கிரிக்கெட் உதயமானது.

இதன் பரினாம வளர்ச்சியாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் கவுன்சில் (IWSS) 1958ம் ஆண்டு துவக்கப்படுகிறது. இதனுடன் இங்கிலீஷ் மகளிர் கிரிக்கெட் அசோஷியேஷன் இணைக்கப்படுகிறது. பின்னர் IWSS – ICC (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் )2005ம் ஆண்டு இணைக்கப்படுகிறது.

1934ம் ஆண்டிலிருந்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளும், 1973ம் ஆண்டிலிருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகிறது. டி20 தாக்கத்தால், 2004ம் ஆண்டு  சர்வதேச அளவில் மகளிர் டி20 போட்டி விளையாடப்பட்டது.

இது வரை 10 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை ஆஸ்திரேலியாவும், 3 முறை இங்கிலாந்தும்,  ஒருமுறை நியூசிலாந்தும் கோப்பையை வென்றுள்ளது.  இந்திய அணி 2005ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதுவே இந்தியாவின் சாதனையாக தற்போது வரை உள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளுக்கு 8 நாடுகள் மட்டுமே விளையாட முடியும். இதில் பங்கேற்க வேண்டும் என்றால் இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு கால்வைக்க முடியும். 

இந்திய மகளிர் அணி

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா 1973ம் ஆண்டுதான் கால் பதிக்கிறது. லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் சங்கம் உதயமாகிறது. 

பிறகு அதே ஆண்டு மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மும்பை, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேஷ் மாநிலங்கள் மட்டுமே பங்கேற்கின்றன. பின்னர் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியடைகிறது. ராணி ஜான்சி டிராபி, துணை ஜூனியர், சீனியர் கோப்பை,  பிரியதர்ஷினி கோப்பை, ராவ் கோப்பை என மகளிர் கிரிக்கெட் இந்தியா முழுக்க விரிவடைகிறது.

1975ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 3 டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்கிறது. 1976ம் ஆண்டு 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தனது முதல் வெற்றிக் கணக்கை துவக்குகிறது.

1995ம் ஆண்டு ஒருநாள் போட்டி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக தொடருக்கான கோப்பையை கைபற்றுகிறது.  இது வரை 6 ஆசிய உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அனைத்திலும் இந்தியா தான் சாம்பியன். 

சர்வதேச அளவில் இந்திய அணி 5வது இடத்தில் தான் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா தொடர்ந்து தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

பேட்டிங் தர வரிசையில் இந்திய அணியின் வீரர்  மிதாலி ராஜ் 5 சதம்; 43 அரை சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  தற்போதைய இந்திய அணியின் கேப்டன். அயர்லாந்து அணியுடன் 114 ரன்கள் எடுத்துள்ளார்.   ஒரு நாள் போட்டியில்  இதுவே இவரின் அதிகப்படியான ரன் ஆகும். டெஸ்ட் போட்டியில் 214 ரன்களை அடித்துள்ளார். 

ஜீலான் கோஸ்வாமி இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர். 175 விக்கெட்டுகளை விழ்த்தி சர்வதேச அளவில் ஐஊஊ தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார். இவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். 

இந்திய அணியின் துவக்க காலங்களிலருந்தே சாந்தா ரங்கசாமி, டயானா ஏட்ஜி, சுதாஷா, சந்தியா அகர்வால், மீதாலி ராஜ், ஜீலான் கோஸ்வாமி என பல வீரர்கள் நமது நாட்டுக்காக சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். சாந்தா ரங்கசாமி, டயானா ஏட்ஜி, சுபாலி குல்கர்னி ஆகியோருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கிப் பெருமை சேர்த்துள்ளது.

வருகிற ஜூன் 24ந்தேதியிலிருந்து ஜூலை 23ந்தேதி வரை 11வது உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றன. மற்ற அணிகளுக்கான தகுதி போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது.  இலங்கை, தென் அமெரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகின்றன. 

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை பார்க்காதவர் கிரிக்கெட் ரசிகனாக இருக்கவே முடியாது என சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். இந்த உலக கோப்பை சவாலானது. ஏன் என்றால் ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலம் படைத்தவை. இருந்தாலும் இந்திய அணியே உலக கோப்பையை இந்த முறை வாங்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கிறது என சச்சின் கூறியிருக்கிறார். அதைபோல் நமது இதயமும் இந்திய மகளிர் அணி கோப்பையை வெள்ளி வேண்டும் என துடிக்கட்டும்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *