19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. ஏற்கனவே 4 முறை கோப்பை வென்ற இந்திய அணி 5 ஆவது முறையாகக் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சீனியர் அணி உலகக் கோப்பை வெல்ல முடியாத வருத்தத்திலிருந்த ரசிகர்களுக்கு ஜூனியர்களின் ஒவ்வொரு வெற்றியும் உற்சாகத்தை அளித்தது.
ஒருபுறம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வர மற்றொரு புறம் வங்கதேச அணி பலம் வாய்ந்த அணிகளைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு வந்தது.
இறுதிபோட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுபோல் சரிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆலமரம் போல் நின்று அணியின் ரன்னை உயர்த்தினார். இருந்தாலும் 200 ரன்கள் கூட இந்திய அணியால் எட்ட முடியவில்லை.
பின்னர் களம் இறங்கிய வங்க தேச வீரர்களும் இந்திய அணியின் பந்துகளை சிதறடித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வெற்றி நழுவ, சுயர்பந்து வீச்சாளர் ரவி பிஸ்ணாய் 4 விக்கெட் எடுத்து வங்கதேசத்தின் வெற்றியைத் தடுத்தார். அந்த நொடியிலிருந்து இரு அணிகளுக்குமே வெற்றி சமமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வங்கதேச வீரர்கள் அக்பர் அலி, `ஹிசைன் எமன் நிதானமாக விளையாடி முதல் முறையாக வங்கதேசத்தை உலகக் கோப்பையில் முத்தமிட வைத்தனர். சமீப போட்டிகளில் வங்கசேத வீரர்களின் ஆட்டம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. வரும் காலங்களில் வங்கதேசம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.
நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியது இந்த தொடர். ஜப்பான் அணியை 50 ரன்னை கூட அடிக்க விடாமல் சுருட்டியது எல்லாம் வேற லெவல். இப்போட்டியைப் பார்த்தவர்களுக்கு இது சர்வதேச போட்டிதானா என்ற சந்தேகம் வந்திருக்கும்.
இத்தொடரின் நாயகன் என்றால் அது இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். 6 போட்டியில் ஜப்பான் அணியுடன் மட்டும் 29 ரன். மற்ற போட்டிகளில் எல்லாம் அரைசதத்திற்கு மேல். அதிலும் பாகிஸ்தானுடனான போட்டியில் சிக்சருடன சதம் அடித்தது இவரின் மறக்க முடியாத நினைவு.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2001 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் மாநிலம் படோ`ஹியில் உள்ள சூரியாவானில் பிறந்தார். இவரின் பெற்றோர் பூபேந்திர ஜெய்ஸ்வால் , காஞ்சன ஜெய்ஸ்வால் ஆவர். தந்தை சிறிய ஆர்ட்வேர் கடை வைத்துள்ளார். இதில் கிடைக்கும் சொற்ப பணத்தை நம்பி ஜெய்ஸ்வால் குடும்பம் உள்ளது.
கிரிக்கெட் மீது ஆசை வந்ததால் 10 வயதில் மும்பையின் தாதர் பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் பயிற்சியில் சேர்கிறார் ஜெய்ஸ்வால். ஊரிலிருந்து வந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆனதால், கல்பதேவி என்ற பகுதியில் பால் கடையில் தங்க அவருக்கு இடம் கிடைத்தது. இங்கிருந்து தினம் பயிற்சிக்குச் சென்றார். பயிற்சி முடிந்து வந்தவுடன் உடல் வலியால் தூங்கி விடுவதால் இவரால் பால் கடைக்கு உதவி முடியவில்லை. இதனால் இதன் உரிமையாளர் ஜெய்ஸ்வாலை வெளியேற்றி விடுகிறார்.
எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்த ஜெய்ஸ்வாலுக்கு பயிற்சி மைதானத்திலேயே கூடாரத்தில் தங்க இடம் கிடைத்தது. 3 ஆண்டுகள் இந்த கூடாரம் தான் இவரின் வீடு.
தந்தையிடம் வரும் பணம் ஒருவாரத்திற்கே பத்தாது. மேலும் அவரிடமிருந்து காசையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் பானிபூரி கடையில் வேலையில் சேர்க்கிறார். கடையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய தோழர்கள் யாரும் இங்கு பானிபூரி சாப்பிட வரக்கூடாது என ஒவ்வோரு நொடியும் அவரின் மனம் துடித்தது. இருந்தாலும் பயிற்சியிலிருந்த சகவீரர்கள் கடைந்து வந்து செல்வார்கள். அப்போது எல்லாம் அவமானத்தின் வலியோடு ஒவ்வொரு நாளையும் கடந்துள்ளார்.
காலையில் உணவு இல்லாமல் பயிற்சி, மதியம் சகவீரர்களுடன் உணவு, இரவும் பல நாள் வெறும் வயிற்றில் தூக்கம். இப்படி பசியில் தவித்த போது தந்தை அனுப்பும் சொற் பணமே இவருக்கு ‘தங்க முட்டையாக’ இருந்தது. மேலும் பசியைப் போக்கி, மன உறுதியுடன் கிரிக்கெட் விளையாடவும் உதவியது.
ஜெய்ஸ்வால் வேகமான பந்தை சர்வ சாதாரணமாகத் தட்டி விளையாடுவதைப் பார்த்து வியந்த சாண்டாக்ரூஸ்ல் கிரிக்கெட் அகாடமி நடத்தி வந்த ஜ்வாலா சிங், இவரை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். அப்போதே ஜெய்ஸ்வால் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என நம்பினார் ஜ்வாலா சிங்.
இவரின் நம்பிக்கையை நிஜமாக்கும் விதமாக 2015 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கா போட்டியில் 315 ரன் மற்றும் 13 விக்கெட் எடுத்து ஆல்ரவுண்டர் சாதனை படைத்தார். இது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்றது. அப்போதே இவரின் பெயர் ஒலிக்கத் துவங்கியது.
பின்னர் ஏசிசி கோப்பையில் 318 ரன். 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் 220 பந்தில் 173 ரன். இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் 4 அரை சதம் என தன் மட்டையை சுற்றி 19 வயதுக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து 6 போட்டியில் 400 ரன்கள் அடித்து, தொடர் நாயகன் விருதைப் பெற்று உலக முழுவதும் தன் பெயரை ஒலிக்கச் செய்துள்ளார் ஜெய்ஸ்வால். ஜ.பி.எல் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. இத்தொடரில் அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை நாம் பார்ப்போம்.
வீராட் கோலி, ரிசப்பண்ட், ப்ரிதிவ்சா, தவான் என பல முன்னணி இந்திய வீரர்கள் 19 வயது உலகக் கோப்பை போட்டியை விளையாடியவர்கள். இந்த வரிசையில் ஜெய்ஸ்வால் இடம்பெற வேண்டும் என்றால் ஜபிஎல் உள்ளிட்ட இனிவரும் போட்டிகளில் தன் வித்தையைக் காட்ட வேண்டும்.
ஜெய்ஸ்வாலால் இது கூட சமாளித்து விட முடியும். சீனியர் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது தற்போது கடினமாக உள்ளது. சஞ்சுசாம்சன் போன்ற வீரர்கள் ‘வழிமீது விழிவைத்து’ காத்திருக்கிறார்கள். கிடைக்கும் சின்ன வாய்ப்பை தவறவிட்டாலும் சிக்கல்தான்.
ஜெய்ஸ்வால் சரியாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சீனிமர் அணியில் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த சவாலை எப்படி தாண்டுகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a Reply