மல்யுத்தத்தில் பூத்த தங்க மலர் 

சீனா நிருபர் தனது தினசரி பத்திரிக்கையை புரட்டுகிறார். அதில் இந்தியாவிலேயே மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்று வர்ணிக்கப் பட்டிருந்தது. 

இதைப் படித்தவுடன் அவருக்கு ஏதோ ஒன்று தோன்றுகிறது. உடனே தனது மடிக்கணினியை எடுக்கிறார். அதைத் திறக்கிறார் கூகுளில் தேடுகிறார்.சீன மொழியில் படத்தின் போஸ்டர் காட்டுகிறது. இவள் தானா அவள் என்று அருகே இருந்தவர் கேட்கிறார். இதற்கு அவர் இல்லை எனப் பதிலளிக்கிறார். படத்தில் வந்த கீதா, பபிதா கதாப்பாத்திரங்கள். இவர்கள் நடிகர்கள். நிஜங்கள் இவர்கள் இல்லை என்கிறார். 

போகத் குடும்பத்திலிருந்து வந்தவள் தான் இந்தப் பெண். அவள் வேறு யாரும் அல்ல கீதா, பபிதா சகோதரிதான் வினேஷ் போகத். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமீர்கான் நடிப்பில் வெளிவந்த படம் ‘தங்கள்’. மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற படம். மல்யுத்தம் என்றாள் என்ன? என்பதைக் காட்சிகளாக நமக்குக் காட்டிய படம். விளையாட்டின் ஜீவனை உயிர்ப்போடு காட்சிப்படுத்தியதால் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெற்றி பெற்றது இந்தப் படம். 

சீன நிருபரை விடுங்கள். நமக்கே வினேஷ் போகத் தங்கம் வென்றார் என்ற செய்தியை கேட்ட, படித்தவுடன் ‘தங்கள்’ படத்தின் கீதா, பபிதா ஆகியோர் தான் நினைவில் ஒரு நிமிடம் வந்து சென்றிருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் ஹரியானவைச் சேர்ந்த வினேஷ் போகத் பெண்கள் மல்யுத்தம் 50 கி.கி. பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார் உஸ்பெகிஸ்தான் வீரர் யஷி முரட்டோவாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகிறார். இதில் ஜப்பானின் இரியேயுகியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கத்தை பெறுகிறார் வினேஷ். 

ஆசிய விளையாட்டில் பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் இவர். 2014ம் ஆண்டு இன்ச்சானில் நடைபெற்ற போது இவரால் வெண்கலம் தான் பெற முடிந்தது. கடின உழைப்பால் இம்முறை தங்கம் கிடைத்தது இவருக்கு. 

இந்த வெற்றி அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. 2016 ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக், காலிறுதிப் போட்டியில் சீனாவின் சன் யனான் பிடித்த உடும்பு பிடியில் வினேஷ் போகத்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் கண்ணீருடன் நாடு திரும்பிவிட்டார். சீன வீராங்கனையுடன் இவர் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறார். 

காயத்தால் 9 மாதங்கள் ஒரு சக்கர நாற்காலியில் ஓய்வில் இருந்தார். அந்த நாட்கள் இரண்டு நாட்கள். “காயங்கள் எல்லா வீரர்களுக்கும் ஏற்படும். இதனால் மனம், உடல் சோர்வடையும். இதிலிருந்து எல்லோரும் மீண்டு வருகிறார்கள். வந்திருக்கிறார்கள். ஆனால் காயங்கள் சில நேரங்களில் ஒரு மனிதனை அதிக வலிமை ஆக்குகிறது. என்னையும் இந்தக் காயம் தான் வலிமையாக்கியது” என்கிறார். அவரின் இந்த மன உறுதிதான் மூன்று முறை சீன வீராங்கனையுடன் தோற்றாலும், ஆசிய போட்டியில் அவரை எளிதில் சாய்த்து வெற்றி பெற முடிந்தது. 

காயத்திலிருந்து மீண்டு வந்தவருக்கு மேலும் ஒரு காயம் ஏற்பட்டது. அது மல்யுத்த கூட்டமைப்பை அவமதித்ததற்காக அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் என் மல்யுத்த வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். சோதனையான காலங்களிலிருந்து மீண்டு வந்து பலர் சாதனைப் படைத்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் உணர்ந்ததால்தான் என்னால் மல்யுத்தத்தில் மீண்டும் கால் வைத்த முடிந்தது. இது வினேஷ் மல்யுத்தத்தின் மீது கொண்டுள்ள காதலைக் காட்டுகிறது. 

நான் அதிகம் வெள்ளி பதக்கம் தான் வென்றுள்ளேன். ஆனால் எப்போதும் என் கனவு தங்கம். இந்தப் பேராசை தான் அவரை ஆசிய போட்டியில் தங்கப் பதக்கத்தை முத்தமிட வைத்துள்ளது. தன்னுடைய இருண்ட நாட்களைத் தங்கம் வென்று வெளிச்சமாக்கி இருக்கிறார் இவர். 

குடும்பமே மல்யுத்த தோட்டமாக இருந்தாலும் அந்தத் தோட்டத்தில் பூத்த தங்க மலர் வினேஷ் போகத். தனக்கென்று ஒரு வரலாற்றைப் படைத்திருக்கிறார். 2020 டோக்கியோவிலும் புதிய வரலாறு எழுத வாழ்த்துவோம்.  


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *