வாழும் மூதாதையர்கள்

கருத்த முகம், பரட்டை தலை, கந்தல் துணி உடுத்திய ஒருவரைப் பார்த்தால் என்ன காட்டுவாசி மாதிரி இருக்கான் என நாம் சொல்வோம்.  ஏன் என்றால் மலைமக்கள் அல்லது பழங்குடி மனிதற்களை இப்படித்தான் சினிமாவும் நமது சமூக அமைப்பும் உருவகப் படுத்தியிருக்கிறது.

இப்படி பழங்குடி மக்கள் பற்றிய தவறான கற்பிதங்களை உடைக்கவும், இளைய சமூகம் இவர்களை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக முவைவர் அ.பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்’ நூலை உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 36 வகையான பழங்குடி இனக்குழுக்கள் உள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை, அடியன் அரசநாடன் எரவல்லன் இருளர் காடர் கம்மாரா காணிக் காரன் கணியான் காட்டு நாயக்கன் கொச்சுவேலன் கொண்டகாபு கொண்டரெட்டி கொரகர் கோத்தர் குடியர் குறிச்சன் குறுமபர் குறுமன்கள் மகாமலசர் மலை அரையன் மலைப்பன்டாரம் மலைவேடன் மலைக்குறவன் மலசர் மலையாளி மலையக்கண்டி மன்னான் முடுவன் முதுவன் பள்ளேயன் பள்ளியான் பளியர் பணியன் சோளகர் தோடர் ஊராள்.

இவர்களில் மலையாளி பயங்குடியினர் தான் 3 லட்சத்து 10 ஆயிரத்து 42 பேர் உள்ளனர். அரநாடன் இனத்தில் வெறும் 44 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் சில பயங்குடியினரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.  இந்த பள்ளி விவரத்தைப் பார்க்கும் போது, சிறிய இனக்குழு அழிவின் விளிம்பில் இருப்பதை நாம் அறிய முடிகிறது.

36 பழங்குடிகளில் 13  இனக்குழுக்களை தேர்வு செய்து, இவர்களின்  தனித்த சிறப்புகளையும், கலாச்சாரத்தையும், வாழ்வியல் முறையையும், வாழும் மூதாதையர் நூலில் அறிமுகம் செய்து வைக்கிறார் பகத்சிங்.

இருளர் பழங்குடிகள் கோவையை பூர்வீகமாக கொண்டவர்கள். எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இருண்ட காட்டில் பதுங்கியதால் இவர்களுக்கு இருளர் என பெயர் வந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய பழங்குடிகள் இவர்கள்.

மலை இருளர் , சமவெளி இருளர் என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர். மலை இருளர்கள் நீலகிரி குன்னூர் ஆனைமலை கோவையின் மருதமலை சிறுவாணி மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களிளும், சமவெளி இருளர்கள் திருவள்ளூர் காஞ்சிபுரம செங்களபட்டு் வேலூர் சேலம் தருமபுரி திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 

இவர்கள் இருளிகா என்ற மொழில் பேசுவதாவும் இதை எழுத்து வடிவம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூலாசிரியர் கூறுகிறார்.

இவர்கள் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். எந்த வகையான பாம்பாக இருந்தாலும் அசாத்தியமாக பிடித்து விடுவார்கள்.  தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பாம்பை பிடித்து அதன் விஷத்தை சேகரித்து மருத்துவ பயன்பாட்டிற்கு கொடுக்கிறார்கள். அதைபோல பாம்புகளை பிடி த்து பண்ணைகளில் கொடுத்து சிறிய வருமானத்தையும் ஈட்டுகிறார்கள். பாம்பு பிடிக்க இவர்களுக்கு அரசு லைசன்ஸ் கொடுத்துள்ளது.  அதேபோல மூலிகை தாவரங்களை கொண்டு இயற்கை மருந்துகளை தயாரிக்கின்றனர்.

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் காணிக்காரர் பழங்குடிகளும் மருத்துவ அறிவை பெற்றவர்கள்.  1990 களில் கேரள காணிகள் ஆரோக்கியப் பச்சையில் இருந்து  ஜீவானி என்ற ஊக்க மருந்தை கண்டறிந்தனர். 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்தையும் காணிகள் தங்களின மரபு வழி கண்டறிந்துள்ளனர். இதன் தாவரப் பெயர் humboldita decurrens. இதனை காணிகள் நீர்வட்டி செம்மரவள்ளி என்று அழைக்கிறார்கள். இதை வனிக மருந்தாக பயன்படுத்த இவர்களின் பெயரிலேயே காப்புரிமை பெற்றுள்ளது கேரளாவை சேர்ந்த kritads என்ற நிறுவனம்.

அதேபோல ஆரோக்கியப் பச்சை என்ற தாவரத்தின் பழத்தை சாப்பிட்டால்  15 நாட்கள் வரை கூட உணவில்லாமல் இருக்கலாம் என்பதையும் காணிகள் கண்டறிந்தனர்.

காட்டுநாயக்கர்களும் காய்ச்சல் வயிறு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் தோல் வியாதி பாம்பு கடிகளுக்கும்  மருத்துவ குறிப்புகளை கண்டறிந்துள்ளனர். பளியர்களும் 200க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களை பயன்படுத்துகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பழங்குடி மக்களின் மருத்துவ அறிவை பயன்படுத்தி கொல்லை லாபம் அடிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு உரிய ஊதியமும் மரியாதை கூட கிடைப்பதில்லை என்பதை இந்நூலில் சான்றுகளுடன் நூலாசிரியர் கூறுகிறார்.

வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்ட பிறகும் நகரமய தாக்கத்தாலும் பழங்குடி மக்கள் காப்பி தேயிலை தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கிறார்கள். சோளர்கள் இனக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நெசவு மற்றும் சாயப்பட்டறைகளில் வேலைக்கு செல்கின்றனர்.

 தேன் பழங்கள் கிழங்குகள் சோப்புக்காய் புளி ஆகியவற்றை சேகரித்தும் பொருளீட்கின்றனர். 

முதுவர்கள் நெல் கேழ்வரகு தினை சோளம் அவரை பூசணி ஆகியவற்றை பயிரிடுகிறார்கள். மேலும் காபி மிளகு ஏலக்காய் போன்ற பயிர்களை அதிகம் விளைவிக்கிறார்கள்.

சோளகர் இனக்குழுவில் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்கும் வழங்கம் இல்லை. மேலும் ஆண் வீட்டார்தான் பெண் வீட்டிற்கு வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் இருப்பதை இந்நூல் வழி அறியமுடிகிறது. 

புலிகள் காப்பகம் அணைகள் கட்டுவதால் இவர்களின் வாழ்வியல் பாதிப்பையும் நூலாசிரியர் சுட்டி காட்டுகிறார்.

பழங்குடி மக்கள் எத்தனை சிறப்பு தன்மைகளை கொண்டிருந்தாலும் அதிகார வர்க்கம் இவர்கள் ஒடுக்கவே செய்கிறது.  வனமே இவர்களின் உயிர் மூச்சாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடிகளை வனத்தில் இருந்து விரட்டி இவர்கள் மூச்சை நிறுத்த பெரு முதலாளிகளிகளும் ஆளும் வர்கத்தினரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்களின் இருக்கத்தால் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கும் ஆண்கள்   பொய்வழக்குகளில் கைது செய்து சித்திரவதைக்கும் ஆளாகுகிறார்கள்.

பழங்குடி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ‘வாச்சாத்தி’தான் அடையாளமாக உள்ளது. இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருந்ததையும் இந்நூலில் அ.பகத்சிங் பதிவுசெய்துள்ளார். 

இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வோரு படமும் பழங்குடிகளின் வாழ்கையை வாசகனுக்கு காட்சி மொழியில் விளக்குகிறது. இந்த கலைஞர்களை பாராட்டினால் தகும்.

காடு மலை என நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் பக்தவச்சல பாரதி, எட்கர் தர்ஸ்டன் போன்ற பலரின் நூல்களையும் குறிப்பிட்டு பழங்குடிகள் பற்றி அறிவதற்கான கதவை வாசகனுக்கு திறந்து வைத்துள்ளார் நூலாசிரியர்.

 பழங்குடி மக்கள் பற்றி நிறைய நூல்கள் வந்திருந்தாலும்  வாழும்  மூதாதையர்கள் நூலை தமிழ் சமூகத்திற்கு கிடைத்த  அ.பகத்சிங் ‘கொடை’ என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *