தேன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. இச் சுவையுடன் பால் கலந்தா எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது கடந்த மாதம். ஏனென்றால், கணித மேதையைப் படித்ததும், படமாகப் பார்த்ததும் தான்.
எழுத்தாளர் ரகமியின் எழுத்து ஓவியத்தில் உருவான த.வி வெங்கடேஸ்வரன் செப்பனிட்ட ‘கணித மேதை ராமானுஜன்’ என்ற நூலை ரசித்துள்ளேன். ஒவ்வொருவரும் வாசிப்பின் வேகத்திற்கு ஏற்ப புத்தகங்களை முடிப்போம். ஆனால் இயக்குநர் ஞான ராஜசேகரன் கணித மேதை ராமானுஜத்தின் வரலாற்றை மூன்று மணி நேரத்தில் படிக்கவும், பார்க்கவும் செய்துள்ளார்.
படம் பற்றி சொல்வதற்கு முன் இயக்குநர் குறித்த சிறிய அறிமுகத்தைப் பார்த்து விடுவோம். ஏனெ ன்றால் மசாலா படங்களை எடுத்து அதில் வெற்றி பெற்ற மிகப் பெரிய இயக்குநர்களைத் தான் இந்த உலகம் பாராட்டுகிறது; மெச்சுகிறது. ஆனால் ஞான ராஜசேகரன் இந்த சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான படங்களை கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் 1995-ஆம் ஆண்டு ‘மோகமுள்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் தேசிய விருதையும், தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றது. பிறகு 1999 ஆம் ஆண்டு ‘முகம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
2000 – ஆவது ஆண்டு ‘பாரதி’ திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் நான்கு தேசிய விருதுகளை, ஆறு மாநில விருதுகளை வென்றது. 2007ல் ‘பெரியார்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த ஆண்டு கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ராமானுஜன் ‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கெனவே வரலாற்றின் இரண்டு நாயகர்களை இயக்கியதால் இவருக்கு ராமானுஜனை இயக்குவதற்கு கடினம் இருந்திருக்காது என நினைக்கிறோம்.
இப்போது நாம் படத்திற்குள் செல்வோம், சிறு வயதிலிருந்தே கணிதத்தின் மீது தீராத காதல் கொண்டதால் எந்த நேரமும் எண்களுடனேயே விளையாடிக் கொண்டிருக்கிறார் ராமானுஜன். பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் கல்லூரி செல்கிறார். அங்கு கணிதத்தில் மட்டும் சதம் அடிக்கிறார். மற்ற பாடங்களில் கோட்டை விட, அவரின் திறமை புரிந்து கொள்ளப்படாததால் மனரீதியாக பாதிக்கிறார். மகன் ஏழ்மையை போக்குவான் என நினைத்த அப்பாவின் கனவு மாளிகை இடிந்து விழுகிறது. திருமணம் நடக்கிறது. குடும்பத்தின் வறுமையைப் போக்க பல இடங்களில் ஏறி இறங்குகிறார். எங்கும் அவருக்கு அங்கீகார கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் அதிகமாகிறது.
மதராஸ் போர்ட் ஆபீஸில் குமஸ்தா வேலை கிடைக்கிறது. அங்கு அலுவலக வேலைகளை முடித்து விட்டு எண்களுடன் தன்னை அர்ப்பணித்து விடுவார். இவர் எழுதி வைத்திருந்த கணக்கு ஒன்று அவருடைய மேலதிகாரிக்கு செல்கிறது. இதை பார்த்த அவர் பாராட்டுகிறார்.
பேராசிரியர் ஹார்டி உதவியால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் சேர்ந்து எண்களை ஆராய்கிறார், அங்கு எப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்?பட்டம் பெற்றாரா? எதை எதை கண்டறிந்தார் என்பதைப் படம் பார்த்து அல்லது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே எல்லா எண்களையும் விட பூஜியத்திற்கு மதிப்பு அதிகம் என்று கூறி வாத்தியாரை மடக்குவதும், சுண்டலையும், கொழுக்கட்டையையும் சட்டென்று எண்ணி மனக்கணக்கு போட்டு நீங்கள் கொடுப்பது சிலருக்கு கிடைக்காது என சொல்லுவதும் சிறு வயதிலேயே ராமானுஜத்தின் கணித அறிவைக் காட்டி, அடுத்தடுத்து என்ன வித்தைகளை செய்யப்போகிறார் என்ற ஆர்வத்துடன் நம்மைப் படத்திற்குள் மூழ்கவைக்கிறார் இயக்குநர்.
ராமானுஜம் கணிதத்தின் மீது எந்த அளவிற்குக் காதல் கொண்டிருந்தாரோ அதற்கு இணையாகவே கடவுளையும் வணங்கினார். பல புரியாத கணக்கு புதிர்களுக்கு ‘நாமகிரி தாயார்’தான் விடை கூறுவார் என்று அனைவரிடமும் சொல்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் விடாமுயற்சியாலும், கணிதத்தின் மீதான ஆர்வத்தாலும் அடைந்த அறிவு என்று தான் நாம் பார்க்க வேண்டும்.
கல்லூரி படிக்கும் போது கணிதத்தில் மட்டும் விழுக்காடு மதிப்பெண், பெற்று மற்ற பாடங்களில் கோட்டைவிடுவதால் அவருக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை கிடைக்காமல் போகிறது. அவரின் அம்மா முதல்வரிடம் சென்று ‘என் மகன் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளானே அதற்காக நீங்கள் உதவித் தொகை கொடுக்கலாம் அல்லவா?’ என்று முறையிடுவார். அதற்கு முதல்வர் ‘எல்லாப் பாடங்களிலும் பாஸ் மார்க் எடுத்தால் தான் உதவித்தொகை கிடைக்கும்’ என்பார். இதைப் பார்க்கும் போது ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைக் கண்டு அதில் சிறந்தவனாக வளர்க்க எண்ணாமல் மட்டம் தட்டுவது ராமானுஜம் காலத்திலிருந்தே தொடர் கதையாக தான் வந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
ஹார்டியிடம் மாணவர்கள், ‘நீங்கள் நாத்திகர், ராமானுஜமோ ஆத்திகர். இருவருக்கும் எப்படிப் பொருந்துகிறது’ என கேட்கின்றனர். இதற்கு ‘ராமனுஜத்தின் ஆத்திகத்தை என்னால் சில நிமிடங்களிலேயே தகர்த்து விட முடியும். அந்த நிமிடமே அவனது கணித ஆற்றலும் தகர்ந்து விட்டால்…’ என சொல்லுமிடம் முக்கிய கவனத்தைப் பெறுகிறது.
லண்டனில் உடல் நிலை சரியில்லாத போதும், கணக்கு, கணக்கு என்று இருந்ததாலும், மனைவியை பிரிந்த ஏக்கத்தினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். நாம் என்னதான் கடுமையாக உழைத்தாலும், நமக்கு சிறிதளவு ஓய்வு என்பது கட்டாயம் தேவை. ராமானுஜம் எந்த ஓய்வும் இல்லாமல் உழைத்ததால் தான் இந்த நிலைமைக்கு அவரின் மனது இட்டுச் சென்றுள்ளது என்பதைப் படம் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
மருத்துவர்கள் கொடுக்கும் உணவை ஏற்காமல் சைவ உணவுகளை சாப்பிடுவதில் கண்டிப்புடன் இருப்பது; மனநலம் சரியில்லாதவன் என மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு மருத்துவரிடம் மன நலச் சான்று வாங்குவது; இந்த புறச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவது போன்ற காட்சிகளில் ராமானுஜனின் வலி நம்மைக் கலங்க வைக்கிறது.
குமாஸ்தா வேலை பார்க்கும் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கும் போது ஒரு மாணவன் பூஜியத்தை பூஜியத்தால் வகுத்தால் என்ன வரும் என கேட்பான். இதற்கு நடிப்புடன் விளக்கம் அளித்ததை ஆசிரியர்கள் பார்த்தால் இப்படியும் பாடம் பாடங்களை நடத்த வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வரும்.
ராமனுஜன் பாத்திரத்திற்கு நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
சங்க காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் போது ஏற்படும் வருத்தத்தை இயல்பாக நடித்துள்ளார் ஜானகியாக வரும் பாமா. ஒரே பாட்டில் இவர்களின் அக வாழ்க்கையைக் கூறிய விதம் அருமை.
ஜோசியத்தை நம்பி, மகன் – மருமகளின் அக வாழ்க்கையை நிதைக்கும் சுகாசினியின் நடிப்பு முதிர்ச்சியின் முத்திரை.
ரத்பாபு, ஒய்.ஜி. மகேந்திரா, தலைவாசல் விஜய், அப்பாஸ் நிழல்கள் ரவி, மற்றும் வெளிநாட்டினர் நடிப்பும் பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமாய் உள்ளது.
ஒரு வீரிய விதை முளைக்கும் போதே பூமியைப் பிளந்து எப்படி ஜெயிக்கிறதோ அதைப்போல 32 ஆண்டுகள் தன்னுடைய வாழ்நாளில் பல வேதனைகளை சந்தித்தாலும் அந்த வேதனைகளை சாதனைகளாக மாற்றியவர் என சொல்லும் விதத்தில் இந்த படம் ஒரு முக்கியமான பாடம்.
எந்தப் பாடத்தில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதில் ஊக்கம் கொடுத்தால் இந்தியா பல நூறு ராமானுஜங்களையும், சர். சி. வி ராமன்களையும் வென்றெடுக்குமே! கல்வி உலகம் செய்யுமா என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்புவதில் இயக்குநர் ஞானராஜசேகரன் வெற்றி கண்டிருக்கிறார். இது தான் திரைப்படத்தின் வெற்றியும் கூட.
Leave a Reply