மத்தாப்பின் வெளிச்சத்தில்….

ஓர் ஆண்டில் பல பண்டிகைகள் வந்து செல்கின்றன. இவற்றில் இரண்டிற்கு மட்டும் தனி இடம் கொடுத்து  மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறோம். அந்தப் பண்டிகைகள் எவை என்பது  நம் அனைவருக்கும் தெரிந்ததே. 

‘தீவாவளி’ என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் சிறுசு முதல் பெருசு  வரை அனைவருக்கும்  ஒரு வித உற்சாகம் மனதில் எழும்.  ஆனால்  பெரியவர்களை விட சிறுவர்களின்  உற்சாகம் அலை கடல் போல் பரந்து விரிந்து இருக்கும்.  இந்த விழாவிற்காகத் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருப்பர்.  தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த விழாவை  எப்படிக் கொண்டாடுவது, போன வருடம் இதை வாங்கியாச்சு , இந்த ஆண்டு எந்த வித ஆடை வாங்குவது,  பட்டாசுகள் எவ்வளவு வாங்குவது,  இதற்கு நாம் யார் யாரை சந்திப்பது இப்படியான ஒரு பெரிய திட்டத்தை தங்கள் மனதில் தீட்டிக் கொண்டே வருவார்கள். 

  “டேய் நீ புது சட்டை வாங்கிட்டியாடா, நான் இந்த மாதிரி சட்டை எடுக்கப் போரேண்டா,” இந்த சின்ன வசனத்தை சிறுவர்கள் பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம்  சொல்லிக் கொண்டே இருப்பர்.  (  இந்த வார்த்தைகளை உச்சரிக்காமல்  இளம் பருவத்தை யாரும் கடந்திருக்க வாய்ப்பில்லை.)

தீபாவளி, பொங்கல்  இந்த இரண்டு பண்டிகைகளில் தான்  புதிய ஆடைகள் வாங்குவோம்.  வீட்டில் எத்தனைப் பேர் இருந்தாலும் அனைவருக்குமே ஆடைகள் உண்டு.  ஆனால், இதை நிறைவேற்றுவது கடினம். இருந்தாலும் சமாளித்து விடுவார்கள் அப்பாக்களும், அம்மாக்களும்.  நமக்கு புதிய ஆடையை உடுத்தி அழகு படுத்தும் போது தான் தெரியும் அவர்களுக்கு புது ஆடை இல்லை என்று.

துணிக் எடுக்க குழந்தைகளைக் கடைக்கு கூட்டிச் சென்றால்,  பட்ஜெட்டை மீறி  ஆடைகளைத் தேர்வு செய்வர் ; அடம் பிடிப்பர். ஒரு வழியாக அவர்களை  சமாளித்து,  துணியை வாங்கிக் கொடுத்து  விடுவார்கள் பெற்றோர்கள்.  அந்த ஆடை அப்போது பிடிக்காது. ஆனால் அந்த ஆடையை மாட்டிக் கொண்டு வெளியில் வந்தால் யாராது ‘டேய் சட்ட சூப்பர்’ என்று  சொல்லும் வார்த்தையைக் கேட்டால் அவ்வளவு தான்  அவர்கள்  மனதில் மகிழ்ச்சி அலை பாய ஆரம்பித்து விடும். 

தீபாவளியை முதலில் துப்பாக்கிகளுடன் வரவேற்பவர்கள் குழந்தைகள் தான். ஒரு மாதத்திற்கு முன்பே  அவர்கள் கையில் இருக்கும்  துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள்  தெரித்துக் கொண்டிருக்கும்.  

தீபாவளிக்கு முந்தைய தினம் அம்மாக்கள்  ஓர் ஆட்டுக்கல் முன் அமர்ந்து  இட்டிலி, வடை,  அந்த- இந்த பலகாரத்திற்கு என்று அரைத்துக் கொண்டே இருப்பர். இது முடிந்தவுடன்  அடுத்த நாள் தீபாவளியை வரவேற்பதற்காக சூரியன் காத்துக் கொண்டிருக்கும் வரை பல காரங்களை சுட்டுக் கொண்டே இருப்பார்கள்.   

அவர்களுக்கும் உதவி செய்வது போல் நடித்து சுடச் சுட பலகாரத்தை வயிற்றுக்கு அனுப்பிய சிறிது நேரம் கழித்துத் தூங்கி விடுவோம். 

‘டேய் எழுந்திரிடா’ என்ற சந்தம் கேட்டு  திசையை பார்க்கும் போது தான் தெரியும்  அவர்கள் இரவு முழுவதும் துங்கவில்லை என்று.. 

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு,  சாப்பாட்டை  முடித்து விட்டு  அம்மாவிடம் மத்தியானம் என்ன சமையல் என்று சொல்லிக் கொண்டே பட்டாசு வெடிக்க வீதிக்கு வந்து விடுவோம்.  அக்கம் பக்கத்து சிறுவர்களுடன் சேர்ந்து  பட்டாசுகளை வெடித்து தள்ளிக் கொண்டு இருப்போம்.  வீட்டில் அக்காவோ தங்கையோ இருந்தால் அவர்கள் அம்மாவிற்கு உதவியாக இருப்பார்கள்.  

அவர்களின் அண்ணனோ, தம்பியோ தெருவில் பட்டாசு வெடிப்பதை  வேலை செய்து கொண்டே பார்த்துக் கொண்டிருப்பர். அப்போது அமைதியாக இருந்தவர்கள் இரவின் அழகை ரசிக்க வைக்கும் மத்தாப்புக்கும், புஸ்வாணத்திற்கும், சங்கு சக்கரத்திற்கும் சண்டையிட்டு மல்லு கட்டுவார்கள். 

இப்படியான மகிழ்ச்சிகளை சிறு வயதில் சந்திக்காதவர்கள் யாரும் இருந்திருக்கமுடியாது.  இந்த மகிழ்ச்சி குறிப்பிட்ட வயது வரை தான். ஆனால்  இது ஒரு குளத்தைப் போன்றது.  வளர வளர இந்த குளத்தில் நீர் சுரந்து கடலாக மாறிவிடும்.    இந்த நீர் சுரப்பதற்கு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் சிறு வயதில் இருக்கும் மகிழ்ச்சி தொடர முடியாமல் போகிறது.

 ஆண்களும், பெண்களும் வேலைக்கு சென்ற உடன்  குறைந்த ஊதியம் வாங்கினாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு உடைகளை வாங்கிக் கொடுப்பர்.  அடுத்த மாதம்  அவர்களுக்குப் பண நேருக்கடி ஏற்படும் என்றாலும்  பண்டிகைகளின் மகிழ்ச்சியால் அது மறைந்து விடும்.

தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடத் துணி வாங்குவதற்கு  வெளியூர்களிலிருந்து பேருந்து, ரயில் ஏறி சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களை நோக்கி வருகின்றனர்.   துணிக்   கடையின் ஏசியே  புழுக்கத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எந்த  – அளவிற்கு கூட்டம் வருகிறது என்று. 

 வெளி ஊரில் இருப்பவர்கள்  பண்டிகையைக் கொண்டாட தங்கள் வீட்டிற்கு செல்வது என்பது பெரும் பாடு. ஏனென்றால் ரயிலில் டிக்கட் முன்பதிவு அறிவித்த உடனே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டு விடும். எப்படியாவது வீட்டிற்குச் சென்று விட வேண்டும் என்று முட்டிமோதிச் சென்றால்   கொதிக்கும் பால் பாத்திரத்தை விட்டு வெளிவருவது போல்  அன்ரிசர்வ்டு பெட்டியில்  கூட்டம் அள்ளும்.  எப்படியாவது அடிச்சி புடிச்சி சீட்டு கிடைச்சாலும் ஆத்திக் அவசரத்திற்குக் கூட போக முடியாத நிலையும் ஏற்படுகிறது.  ரயிலில் தான் இப்படியென்றால் பேருந்துகளின் நிலைமையும் இதே தான்.

 இந்த ஆவலுக்கு எல்லாம்  காரணம் ஒன்று  தான். அந்த  ஒன்றிரண்டு நாளில் தான் வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாகப் பார்க்க முடியும்.  ஒன்றாக சாப்பிட முடியும். புத்தாடை அணிய முடியும். பாட்டாசு மத்தாப்பு கொளுத்த முடியும். இதற்காக எப்பேர் பட்ட இன்ப துன்பத்தை சந்தித்தாவது தங்களின் வீடுகளை நோக்கி கால்கள் ஓட ஆரம்பிக்கின்றன.

கம்பி மத்தாப்பில்

தீ ப் பிடித்தால்

இரவின் அழகை 

கண்கள் ரசிக்கும்.

இந்த வெளிச்சம் தான்

குடும்பங்களின் அழகை 

ரசிக்கச் செய்யும்…


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *