விளையாட்டை ‘விளையாட்டாக’ பார்க்கும் நிலை எப்போது வருமோ?

ஓலிம்பிக் வந்தால் தான் நமக்கு விளையாட்டின் மீதான  பாசம்  திடீர் என்று தொற்றிக்கொள்ளும். இந்தியா ஒரு தங்கம் கூட வாங்காதா என ஏங்குவோம். அப்போதுதான் நமக்கு வீரர்களைப் பற்றி தெரியும். இதற்கு முன்பு அவர்கள் பல சாதனைகளை செய்திருந்தாலும் நம் கண்பார்வையில் படாமல் மறைந்திருந்தனர். இது அவர்களின் தவறில்லை. திட்டமிட்டே அரசும், செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் அவர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு காட்டாததுதான்  இதற்கு காரணமாக இருக்க முடியும்.

கிரிக்கெட் போட்டி மட்டும் பக்கம் பக்கமாக செய்தி ஆக்கப்படுகிறது. மற்ற விளையாட்டுகள் ஒரு காலத்தில்  தன்னை முடித்துக்கொள்கிறது. ஏதாவது ஒரு விளையாட்டில் உலக அளவில் சாதனைபடைத்தால்தான் அந்த விளையாட்டைப் பற்றியும், அதன் நாயகனையும் எழுதுவார்கள். அதற்கு முன் அவன் தாண்டி வந்த சாதனைக் கற்களை கண்டும் காணாமல் இருப்பார்கள்.

நம்முடைய தேசிய விளையாட்டான ஹாக்கி அணியின் தலைவன் யார் என்று கேட்டால் பலருக்கும் பெயர் தெரியாது. அதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவன் பெயரை கேட்டால் ஸ்டிவன் ஸ்மித் என பதில் அளிப்பர்.  கடந்த மாதம் நடைபெற்ற உலக கபடி போட்டியை யாரும் கண்டுகொள்ள  வில்லை.  ஆனால் கபடியில் இந்தியா இதுவரை  8 முறை பட்டம்  வென்றுள்ளது என்றால் நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும்  இருக்கும் தானே.

நமது ஊரின் பெருமைகளை யாராவது சிறுமைப்படுத்தினால் அவரிடம் வரிந்து கட்டிக் கொண்டு நாம் சண்டைக்கு செல்கிறோம். ஆனால் நமது மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களைப் பற்றி நமக்கு தெரியாது. எந்த விளையாட்டில் நமது மாவட்டம் சிறப்பாக உள்ளது என்பதும் நமக்கு தெரியாது.

உலக அளவில் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தான் வேலூர் மக்களுக்கே சதிஷ்குமார் சிவலிங்கத்தை தெரியும். நாயகன் மாரியப்பனை சேலம் மக்களுக்கு எப்போது தெரியும்? பாராஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய பிறகு தானே தெரியும்? இப்படி மாவட்டம் தோறும்  உள்ள வீரர்களைப் பற்றி  நமக்குத் தெரியவே தெரியாது.

இவர்களைப் பற்றி எல்லாம் நமக்கு ஏன் தெரிய வில்லை என்றால், நாம் மாவட்ட, மாநில, தேச, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளை கவனிக்காமல் இருப்பதுவும், இப்படியான விளையாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருக்கும் அரசும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். 

மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இருக்கிறதா? என்ன என்ன விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது? எத்தனை வீரர்கள் தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. நம்மிடம் இவற்றை சொல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தயாராகவும் இல்லை. 

தமிழ்நாட்டில்  2015 -16 பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் 91 தங்கம், 84 வெள்ளி, 67 வெண்கலப் பதக்கங்களை மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். சர்வதேச அளிவல் 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். 

சீனாவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலங்களும், பிரேசிலில் நடைபெற்ற கடற்கரை கைப்பந்து போட்டியில் 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளனர். 

விளையாட்டிற்காக தேவையான உபகரணங்கள் இல்லாமலே பள்ளி மாணவர்கள் இப்படியான சாதனைகளை படைத்துள்ளனர். இவர்களுக்கு தேவையான உபகரணங்களை அரசும், பள்ளி நிர்வாகமும் செய்து கொடுத்தால் இன்னும் பல சாதனைகளை இவர்களால் செய்து காட்ட தானே முடியும்.

வேலூர் சத்துவாச்சாரி ஊரைச்சேர்ந்தவர் உலக அளவில் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவரின் ஊர்.  அர்ஜூனா விருது பெற்றவர்கள் இந்த ஊரில் தான் இருக்கிறார்கள். இப்படி விளையாட்டிற்குப் பெருமை மிக்க ஊரில் 400 மீட்டர் ஒடுதளப்பாதை கிடையாது. திருப்பூரிலும் ஓடுதளப்பாதை கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி இந்த ஊர் தடகள வீரர்கள் பயிற்சி பெற முடியும்? அவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க முடியும்?  

இந்தியா சார்பில் பதக்கங்கள் குவிக்க முடியாமல் போவதற்கு வீரர்களுக்கு சர்வ தேச தரத்திலான பயிற்சி இல்லை. போதிய கட்டமைப்பு வசதி இல்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கிறது.  

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் தேவையான பயிற்சி இல்லாமலும் சாதனைப்படக்கும் திறமையான வீரர், வீராங்கனைகள் இருக்கிறார்கள். இவர்களை கண்டறிந்து பயிற்சி அளிப்பதில் தான் நாம் தோல்வி கொள்கிறோம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் கவுரிசங்கரி. இவர் குண்டு எறிதல் வீராங்கனை. 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றார். 

அதன்பிறகு அவருக்கு நிதி உதவி இல்லாததால் போதிய பயிற்சி பெற முடியாமலும், குடும்ப வறுமை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற  முடியாமலும் சிரமப்படுகிறார். இப்படி கவுரி சங்கரியைப் போல் மாவட்டந்தோறும் பல வீரர்கள் தங்கள் சாதனைகளை நிரூபிக்க தக்க வாய்ப்பு கிடைக்காமல்  குடும்ப சூழ்நிலைக்காக ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் தான் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி உள்ளது. இதில் பல விளையாட்டு வீரர்கள் மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்து இந்த விடுதியில் சேருகின்றனர்.  மற்ற மாவட்டங்களில் இருக்கும் விளையாட்டு விடுதிகள் சரியாக பாராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது.

ஒரு வீரருக்கு  உணவிற்கு  250 ரூபாயும்,   சீருடைக்கு 1800 ரூபாயும் செலவிடப்படுகிறது. ஆனால் இது முறையாக மாணவர்களுக்கு சென்றடைகிறது என்றால் கிடையாது. தரமான உணவு அவர்களுக்கு  வழங்கப்படுவதில்லை. 

நம்மால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனால் நம்மை விட குட்டி நாடுகள் கூடித் தங்கத்தை அள்ளுகின்றனரே என நாம் கவலைப்படுகிறோம்.  வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாக நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை  என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டிற்கும் சேர்த்து 114 பயிற்சியாளர்கள் தான் இருக்கிறார்கள். இதில் 83 பேர் தான் நிரந்தரப்பணியாளர்கள். இப்படி குறைவான பயிற்சியாளர்களையும், உரிய தரமான பயிற்சி கூடங்கள் இல்லாமலும் நாம் தங்க வாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? . 

விளையாட்டு வீரர் ஒருவர் தன் நாட்டிற்காக விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி பதக்கங்களை வெல்லத் துடிக்கிறார்.  தன் உடல் வலு இருக்கும் வரை தான் அவரால் போராட முடியும். பிறகு அவரின் வாழ்க்கை கேள்விக் குறிதான். சர்வதேச அளவில் வெற்றி  அல்லது பங்கேற்பு இருந்தால் தான் ரயில்வே, காவல்துறை போன்றவற்றில் வேலை கிடைக்கிறது.  இதிலும் வேலை கிடைக்கவில்லை என்றால் விளையாட்டு வீரர்களின் வாழக்கை மிகவும் கவலைக்குரியது தான். பல சாதனைகளை படைத்த வீரருக்கு மாதம் வெறும் 3 ஆயிரம்  தான் ஓய்வூதியம் கொடுக்கிறது நமது அரசு.   

தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தடகள வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன். இவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். 2006-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 நிமிடம், 3.16 விநாடிகளில் இலக்கை எட்டிய சாந்தி, அதன்பிறகு பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது சாந்தியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.  

இப்போது தான்  சாந்திக்கு  தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணி நியமனம் கிடைத்து இருக்கிறது.  நீண்ட வருட போராட்டமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. 

 சாந்தியைப் போலவே பாலின சர்ச்சைக்கு உள்ளான தென் ஆப்பிரிக்க வீராங்கனை செமானியாவுக்கு அவரின் பதக்கம் திரும்பக் கிடைக்க அவர் நாட்டு மக்கள்  தொடர்ந்து குரல் கொடுத் தார்கள். அதன் விளைவு செமானியாவுக்கு என்ற தனி அங்கீகாரத்தையும், மரியாதையை யும் அந்நாட்டு அரசே கொடுத்திருக்கிறது. செமானிய மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொள்கிறார். இதிலிருந்தே  நாம் எங்கே இருக்கிறோம்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நாம் உணர இயலும்.  

மராட்டிய மாநிலத்தில்  9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு ஒன்றில் விராட் கோலியின் பெண் நண்பர் பெயர் எண்ண? என்ற கேள்வி மாணவர்களிடம்  கேட்கப்பட்டுள்ள திலிருந்தே எத்தகைய அவல நிலையில் இருக்றோம் என்பதை உணர முடியும் ! இந்த நில என்று மாறுமோ…. ? 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *